முதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு!
சென்னை: தமிழக அரசு நிறுவனமான உலகத் தமிழ்ச் சங்கத்தின் முதலாவது உலகத் தமிழ் அமைப்புகளின் மாநாடு மதுரையில் மார்ச் 26-ந் தேதி முதல் மார்ச் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் பங்கேற்க உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தங்களின் தாய்மொழியையும் பண்பாட்டையும் கலையையும் தக்க வைக்கும் நோக்கில் தமிழ் அமைப்புகளை நிறுவித் தமிழர் விழாக்களையும் இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருவதோடு அடுத்த தலைமுறையினருக்குத் தமிழ்க் கல்வியையும் அளித்து வருகின்றனர்.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களில் முதன்மையானது உலகெங்குமுள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ்க் கொண்டு வருதல். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாகவும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்துத் தமிழறிஞர்கள் மேற்கொண்டு வரும் தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள் என தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையிலும் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை முதலாவது உலகத் தமிழ் அமைப்புகள் மாநாட்டினை 2020-ம் ஆண்டு மார்ச் திங்கள் 26 முதல் 30 வரையிலான ஐந்து நாட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஆய்வரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், சொற்பொழிவு, பட்டிமன்றம், கலந்துரையாடல், இலக்கியச் சுற்றுலா, கலை நிகழ்ச்சிகள், தமிழ் அமைப்புகள் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மாநாட்டுப் பொருண்மைகள்:
உலகத் தமிழ் அமைப்புகளின் நோக்கங்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்கள்
உலகத் தமிழ் அமைப்புகளின் திட்டங்கள், தேவைகள்
மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் கலைகளைத் தக்க வைத்தல்
உலகத் தமிழ் வளர்ச்சி
அயலகத் தமிழ்க் கல்வி
அயலகத் தமிழ் இலக்கியம்
உலகத் தமிழறிஞர்கள் மற்றும் தமிழாராய்ச்சி
மொழிபெயர்ப்புகள்
இப்பொருண்மைகள் தொடர்பில் தமிழ் அமைப்புகள் சார்பாகவோ, தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்களோ கட்டுரைகள் அனுப்பலாம். கட்டுரையை 4 பக்க அளவில் ஒருங்குறியில் (யுனிகோடு) தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
கட்டுரையாளர் தங்கள் புகைப்படம், தன் விவரக் குறிப்புடன் தாங்கள் சார்ந்துள்ள தமிழ் அமைப்பின் முழு விவரத்தையும் இணைத்து utamanaadu2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.,02.2020க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், உலகத் தமிழ் அமைப்புகள் மாநாட்டில் பங்குபெற விரும்பும் தமிழ் அமைப்புகள் தங்கள் அமைப்பினை உடன் உலகத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ் அமைப்புகள் உறுப்பினர் படிவத்தினை உலகத் தமிழ்ச் சங்கத்தின் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு:
தொலைபேசி எண்: 0452-2530799 / 2530766
கட்செவி எண்: 9445912314
மின்னஞ்சல் முகவரி: utamanaadu2020@gmail.com
வலைத்தளம்: www.utsmdu.org
இவ்வாறு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.